Saturday 1 October 2011

பெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்


அய்யாவின் பொறுமை

அய்யாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர் பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.
இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அய்யா, இப்படியா பேசுவது? பொறுமையாக அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும் என்றார்.
உடனே அந்தப் பார்ப்பனர், பெரியவரே நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார். இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பேசுவர் என்றார். அய்யாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக இறங்கிவிட்டார். அய்யா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்தப் பார்ப்பனரைப் பார்த்து, அவர்தானய்யா ராமசாமி நாயக்கர். இப்படிப் பேசிவிட்டீரே என்றார். கழிப்பறையிலிருந்து அய்யா வந்தவுடன் பார்ப்பனர் எழுந்து நின்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, என்னை மன்னித்துவிடுங்கள் அய்யா. தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும் பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று உபசரித்துச் சென்றார்.



(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)

No comments:

Post a Comment