http://www.dravidianuniversity.ac.in/
இந்திய மாநிலங்களுக்கிடையிலும் எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. நதி நீர்ப் பங்கீட்டிலும் சிக்கல்கள் தொடர்கதையாகி வருகின்றன. எந்த மாநிலமும் பிற மாநிலங்களின் உதவியின்றி சுயம்புவாக இயஙகமுடியாது என்ற உண்மை தெரிந்தபோதிலும், சாமான்ய மக்களிடம் பிரதேச வெறி எனும் தீயை அணைந்து விடாமல் அரசியல்வாதிகள் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
திராவிடக் கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் இல்லை என்ற ஆர்ப்பரிப்பு, ஆனால், இதர தென் தென்மாநிலங்களில் திராவிடம் செல்லுபடியாகவில்லை. திராவிட இயக்கத் தலைவர்களுக்குப் போணியாகாதென்று தெரிந்ததால் அதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை. மக்களுக்கோ இதைப்பற்றிச் சிந்திக்கத் தெரியவில்லை; நேரமும் இல்லை.
தமிழக மக்களைப் பாடாய்ப்படுத்திடும் திராவிடம் தென்னிந்திய அளவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஐக்கியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஐக்கிய உணர்வு எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டால் காவிரிப் பிரச்சனையோ, முல்லைப் பெரியார் தகராறோ ஒரு போதும் ஏற்படாது.
மனித வாழ்க்கையில் தணியாத தாகமும் மோகமும் உள்ள ஒரு பகுதி அவரவர் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகும். மொழி இல்லாமல் இவை இல்லை. அவரவர் பயன்படுத்துவது அவரவரது தாய் மொழியாகஅமைகின்றது. நமது தாய் மொழியாம் தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி.
திராவிட மொழிகள் உலகின் மிகப் பழமையான மொழிக் குடும்பங்களில் ஒன்றாகும். திராவிட மொழிகளாக 27 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று தற்காலம் வரை சிறப்பான வரலாற்றையும் பெருமையையும் உடையதாக உள்ளன. இம்மொழிகள் கால மாற்றங்களினால் தனித்தனியாக பிரிந்து, தனித்தனி வரலாற்றை உருவாக்கி கொண்டன.
மேலும் திராவிட இனமாக ஒன்றுப்பட்டு இருந்த மக்கள் அனைவரும், மொழி சார்ந்து பிரிய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் திராவிட மொழிகளின் பொதுவான பண்புகள், சிறப்புகள் மற்றும் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை அறியவும், அதன் மூலம் உயர்வான பல இலக்குகளை அடையவும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. இந்த தேவையை நிறைவு செய்யவும் திராவிட மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டதே "திராவிடப் பல்கலைக்கழகம்".
தென்மாநிலத்தவர் தனித்தனியாகச் செய்ல்பட்டால் முன்னேற்றம் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து கொண்டோரின் பெரு முயற்சியின்விளைவாக ஆந்திர அரசால் , தமிழக, கேரள, கர்நாடக அரசுகளின் கூட்டு முயற்சியால் 1997ஆம் ஆண்டு “திராவிடப் பல்கலைக் கழகம்”உருவாக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் தென்மேற்கு எல்லையில் சித்தூர் மாவட்டம், குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, கர்நாடக எல்லையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரமும், தமிழக எல்லையிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரமும் பயணித்தால் குப்பத்தை அடைந்துவிடலாம். கேரள எல்லையிலிருந்து நானகரை மணிநேரப் பயண தூரத்தில் குப்பம் அமைந்துள்ளது.
தற்போது இங்கு திராவிட "கலைகள் மற்றும் பண்பாடு - ஒப்பீடு, கல்வி மற்றும் மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திராவிட இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை முறை நோய் தீர்வு" ஆகிய தனித்தனி துறைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையும் அதனுள் மேலும் சில பிரிவுகளை கொண்டிருக்கிறது. தவிர "பிராசரங்கா" என்ற பதிப்பு பிரிவும், "அனுஸ்ருஜான" என்ற மொழிப்பெயர்ப்பு பிரிவும் உள்ளன.
திராவிட மொழிகளின் ஒருமைப்பாட்டையும் திராவிட பண்பாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒரே இடத்தில் கற்கவும், ஆய்வுகள் செய்யவும், மேம்படுத்தவும் ஆதாரமாக விளங்கும் திராவிடப் பல்கலைக்கழகம் விரைவாக அதன் இலக்குகளை அடையவும், மேலும் பலமடங்கு விரிவடையவும் வாழ்த்துவோம். இப்பல்கலைக் கழகத்தை பற்றிய மேலும் விவரங்களுக்கு http://www.dravidianuniversity.ac.in/ என்ற இணையத்தள முகவரியை காணவும்.
மா.ஆண்டோ பீட்டர் அவர்களைச் செயலராகக் கொண்ட கணினித்தமிழ்ச் நடத்திய இலவச தமிழ்க்கணினி பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதில் தெரிந்து கொண்ட பல நல்ல தகவல்களில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment