Tuesday, 8 November 2011

இந்து மதம், சாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா?


இந்து மதத்தின் பெருமை: உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இன்று மனிதனின் வாழ்கை என்பது ஒரு மிருகத்தனமான அல்லது ஒரு இயந்திரத்தனமான வாழ்கை போன்று மாறிவிட்டது. பல நாடுகள் தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டு, பொருளாதார ரீதியில் ஒரு இழிவான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்த மிருகத்தனமான வாழ்கை முறை, பாரத
தேசத்தையும் தாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால், இன்றளவும் அதனால் வெற்றி பெற முடியவில்லை.
பாரத தேசத்தில் இன்றளவும், அதன் மதமும், கலாச்சாரமும் உயிரோடு தான் இருக்கிறது. இதை நிரூபிப்பதற்கு பெரிய ஆய்வுகளோ, Survey- களோ தேவையில்லை. நம்மை சுற்றி நடப்பதை கவினித்தாலே போது. "MODERN GENERATION" , "21st Century Generation" என்னும் பல பெயர் கொண்டு அழைக்கப்படும். இந்த காலத்திலும் கூட, பல இளைஞர்கள் விபூதி, சந்தணம், குங்குமம், நாமம் போன்ற சமய சின்னங்களை அணிந்தே வெளியே வருகிண்றனர். கோயிலில் மக்கள் கூட்டம் கடல் அலைப் போல காணப்படுகிறது. உதாரணமாக, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணிநேரமாகிறது. 3KM வரை, வரிசையில் மக்கள் காத்துகிடக்கின்றனர். இது ஒரு சில எடுத்துக்காட்டுகளே. முழுவதையும் எழுதினால் பக்கங்கள் நிரம்பி வழிந்துவிடும்.
இந்த நவீன நூற்றாண்டில். அதுவும், அதிவேக விஞ்ஞான வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும் கூட, இந்து மதம் பட்டொளி வீசி பறக்கிறது என்றால் , விஞ்ஞானத்தையும் தாண்டி, இந்து மதத்தின் உண்மை தன்மை மக்களின் ஆழ் மனதில் வேரூன்றி நிற்கிறது என்பது புலப்படும். "பாரத தேசத்தின் ஆன்மா இந்து மதமே; அவர்களின் ஆன்மீகமே". இதை கூறியது வீர துறவி சுவாமி விவேகானந்தர்.
இது தான் உண்மையும் கூட. சங்கரர், ராமானுசர், சுவாமி விவேகானந்தர், பரமஹம்சர், ராகவேந்தர், அரவிந்தர், மதுரானந்தர் போன்ற பல மகான்கள் ஏற்று கொண்ட இந்து மதம் மாசற்ற தங்கத்தைப் போன்றது. இந்த புனிதமான மதத்தின் மீது பலர் ஆவேசம் பொங்க ஓர் கேள்வியை (குற்றச்சாட்டை) முன்வைப்பர். அது தான், "சாதி ஏற்ற தாழ்வு".
பல சுயநலமிகள், "சாதி ஏற்ற தாழ்வுக்கு, இந்து மதம் தான் காரணம்" என்று கூறிவிடுவர். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களும் அதை சரி என்று நம்பிவிடுவர்.சாதி: இந்து மதம், சாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா? இந்த கேள்விக்கு தான் நாம் விடை காண இருக்கிறோம். இந்து மதம் என்பது அளக்க முடியாத பெருங்கடலைப் போன்றது. இந்த பெருங்கடலில் இருந்து நான் பெற்ற ஒரு சில துளிகள் அறிவைக் கொண்டு தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
நாம் இப்போது பின்பற்றிவரும் சாதி முறை, பிறப்பின் அடிப்படையில் வருவது (BIRTH - BASE). அதாவது, நீங்கள் நாடார் சாதியாக இருந்தால், உங்கள் குழந்தையும் நாடார் தான், உங்கள் குழந்தையின் குழந்தையும் நாடார் தான். இந்த சாதி முறை தான், ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமை கொடுமைகளையும் அரங்கேற்றி வருகிறது. சரி. இந்துக்கள் பின்பற்றும் இந்த சாதி முறைக்கு இந்து மதம் தான் காரணமா?
"ஆம்" என்று நீங்கள் கூறினால், அது உங்கள் அறியாமையைத் தான் குறிக்கும். காரணம், இந்துக்களின் வேதமான ரிக், எஜர், சாம, அதர்வண வேதங்கள் எதிலும், "பிறப்பு அடிப்படியில் சாதி" என்ற கோட்பாடு இல்லை! இன்னும் சொல்லப் போனால், வேதத்திலும் சரி, வேதக் காலங்களிலும் சரி, சாதி என்ற ஒன்று கிடையாது. வர்ணம் என்ற முறை மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது. சாதி என்பது வேறு, வர்ணம் என்பது வேறு. வர்ணம் என்பதில் நான்கு பிரிவுகள் மட்டுமே உள்ளது. அங்கு, தேவர்; பறையர்; நாடார்; வேளாளர்..... போன்ற எந்த பிரிவுகளும் கிடையாது.
வர்ண முறை என்பது மனிதர்களை பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வகைகளாக, அவர்களின் குணத்துக்கு ஏற்ப வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செய்யும் தொழில் என்பது அவரவர் குணத்துக்கு ஏற்ப இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதாவது, பிரமணன் என்பவனிடம் அடக்கம், தவம், பொறுமை, நூலறிவு, தெய்வபக்தி போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும். க்ஷத்திரியனிடம் வீரம், துணிவு, உறுதி, திறமை, கொடை, ஆளுமை திறன் போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும். வைசியரிடம் உழவு, கால்நடை, வாணிபம்போன்றவற்றை நடத்தும் அறிவு மிகுதியாய் இருக்கும். சூத்திர வர்ணத்தவரிடம் தனிப்பட்ட எந்த விஷேச குணமும் இருக்காது. பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில். ஆக, நாம் இதில் இருந்து முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, "வர்ணம் என்பது பிறப்பு அடிப்படையில் வகுக்கப்படுவது அல்ல" என்பதாகும்.
அதாவது, நீங்கள் ஒரு பிராமணன் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு பிராமணனுக்குறிய குணம் இல்லாமல், வீரம், துணிவு, ஆளுமை திறன் போன்ற குணங்கள் மிகுதியாய் இருந்து, ஒரு போராளி ஆகிறான். இப்போது, உங்கள் குழந்தையின் வர்ணம் க்ஷத்திரியனே தவிற பிராமணன் அல்ல. இது தான் சாதி முறைக்கும், வர்ண முறைக்கும் உள்ள வித்தியாசம்.வர்ண முறையின்படி,
"ஒருவரின் வர்ண அமைவுக்கும், அவரின் தந்தை / தாயின் வர்ணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." பகவான் கிருஷ்ணர், கீதையிலும் வர்ண முறைப்பற்றி தான் கூறியிருக்கிறாரே தவிர சாதி பற்றியல்ல என்பது குறிப்பிடத்தக்கது.ரிக்வேதம் கூறுகிறது, "உங்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. அனைவரும் சகோதரர்களே. ஒன்றுபட்டு வாழ்ந்து மேன்மையை அடைவீர்களாக." இப்படி சிறு சிறு எடுத்துக்கட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம்,
இந்து மதத்தில் சாதிகளோ, ஏற்ற தாழ்வுகளோ இல்லை என்பதை நிருபிக்க. நமது இந்த வாதத்திற்கு வலு சேர்ப்பதில் "வியாசரின் பிறப்பு(ம்)" ஒன்று. வியாசர் தான் இந்து மதத்தின் நான்கு வேதங்களையும் தொகுத்தவர். இவர் யாருக்கு பிறந்தவர் தெரியுமா? ஒரு மகரிஷிக்கும் மீனவப் பெண்ணுக்கும் மகனாய் பிறந்தவர் தான் வியாசர். இதில் இருந்து நாம் அறிய வேண்டிய விஷ்யங்கள்:
* ஒரு மீனவ பெண்மணிக்கு பிறந்த வியாசர் தான் புனிதமான வேதத்தை தொகுத்தவர். மீனவ பெண்ணுக்கு பிறந்தார் என்பதற்காக வியாசரால் தொகுக்கப்பட்ட வேதத்தை யாரும் தீட்டு என்று கூறுவதில்லை.  இதே வேத மந்திரம் தான் கோயிலில் முழங்கிக் கொண்டு இருக்கிறது. மீனவ பெண்ணுக்கு பிறத்த வியாசர் தொகுத்த வேதம் முழங்குவதால், கோவில் தீட்டாகிவட்டது என்று யாரும் கூறுவதில்லை.
ஒரு மகரிஷி, மீனவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அப்படி என்றால், அந்த காலத்தில் வர்ண அடிப்படையில் ஏற்ற தாழ்வு இல்லை என்று தானே அர்த்தம்? அதே சமயம், திருமணத்துக்கு வர்ணம் ஒரு பொருட்டல்ல என்பதும் தெளிவாகும். சிலர் தீண்டாமைக்கு மனு ஸ்மிருதி தான் காரணம் என்பார்கள். ஐந்தாவது வர்ணத்தை புகுத்தியது மனு ஸ்மிருதி தான் என்றும் கூறுவர். ஆனால், இது உண்மையல்ல. சில சுயநமிகள் ஸ்மிருதியை திரித்து, தங்களுக்கு சாதகமாக எழுதிக்கொண்டனர் என்பது தான் உண்மை. என்னும் சொல்லப்போனால், உண்மையான மனுவில் தீண்டாமையும் இல்லை, 5வது வர்ணமும் சொல்லப்படவில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில், மனு ஸ்மிருதியின் ஒரு ஸ்லோகத்தை நான் முன்வைக்கிறேன்:
 சூத்ரோ ப்ராம்மணதாமேதி ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம் க்ஷ்த்ரியாஜ்ஜாதமேவம் து வித்யாத் வைச்யாத் ததைவச. அதாவது, சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். க்ஷத்திரியன் மற்றும் வைசியன் வேறு வர்ணத்தை அடையலாம் என்பது தான் இதன் பொருள். இந்த ஸ்லோகம் என்ன கூற வருகிறது என்றால், எப்போது ஒரு சூத்திரன் தன் நிலையை(குணத்தை) பிராமண நிலைக்கு உயர்த்துகிறானோ அப்போது, அவன் பிராமணன் ஆகிறான். அதே போல, எப்போது ஒரு பிராமணன் தன் குணத்தில் இருந்து தாழ்கிறானோ, அப்போது அவன் சூத்திர வர்ணத்தை அடைகிறான். இதே போல, வைசியரும், க்ஷத்திரியனும் வேறு வர்ணத்தை அடையலாம். வர்ணம் என்பது வர்ண்ஜ (Vrinja) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. வர்ண்ஜ என்பது தெரிந்தெடுத்தல் எனப்படும். இதற்கு வலு சேர்கும் வகையில் தான் மேலே கூறப்பட்ட ஸ்லோகம் அமைந்துள்ளது.
வர்ணம் என்பது யாரோ நமக்காக தரும் பட்டமல்ல. நாமாக நமக்காக தெரிந்து எடுப்பது தான் வர்ணம். மகான் ஸ்ரீ ராகவேந்திரர் கூட சாதி ஏற்ற தாழ்வை ஏற்றதில்லை. அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு ஆதாரமாக முன்வைக்கிறேன். மாளவி என்ற ஊரில் ஒரு கோயிலில் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் தங்கியிருந்த போது, கோவிலுக்கு வெளியே ஒருவர் நின்று கொண்டு, ராகவேந்திரரை பார்த்துக் கொண்டு இருந்தார். இதை கவனித்த ராகவேந்திரர், "உள்ளே வா" என்று அந்த நபரை அழைத்தார். "நான் தாழ்ந்த குடியில் பிறந்தவன். எனக்கு கோயிலில் நுழைய அனுமதி கிடையாது" என்று தயங்கினார். "உயிரில் உயர்வு, தாழ்வு என்ற வித்தியாசம் கிடையாது. உன்னைப் படைத்த கடவுளின் சந்நிதானத்துக்கு, நீ வரக்கூடாது என்று எப்படித் தடுக்கலாம்? தாராளமாக வரலாம்." என்று ராகவேந்திரர் கூறினார். உள்ளே வந்து பாதங்களில் வீழ்ந்த அந்த நபரை, மகான் அவர்கள் தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டார். அந்த நபர் கொடுத்த கடுகையும் மகான் ஏற்றுக்கொண்டார். இதில் இருந்து நாம் அறிவது: தாழ்த்தப்பட்ட குடியினரை கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று பல கட்டு கதையை இந்து மதத்தின் பெயரில் கூறுகின்றனர். ஆனால், ராகவேந்திரர் அந்த தாழ்த்தப்பட்ட நபரை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டார். மகானான அவருக்கு தெரியாத தீட்டா? இன்று வரைக்கும் அவரை மகானாகத் தானே நாம் வணங்குகிறோம்.
ஒரு மகானுக்கு தெரியாத தீட்டு நமக்கு தெரிந்துவிட்டது? சாதி வெறிக் கொண்ட இந்துக்ளே, என்றாவது நீங்கள் இதைப்பற்றி சிந்தித்ததுண்டா? இனியாவது சிந்தியுங்கள். இறுதியாக...... உண்மையில் இந்துக்கள் பின்பற்றி வந்த வர்ண முறை எப்படியோ திரிக்கப்பட்டு, திரிக்கப்பட்டு சாதி என்ற முறை தோன்றியிருக்க வேண்டும். "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பார்கள்.
பாரத இந்துக்கள் சாதியால் பிரிவுப்பட்டது, அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பழத்தை உறித்து வாயில் வைத்ததைப் போல ஆகிவிட்டது. குறிப்பாக, வெள்ளையர்களுக்கு இது மிகவும் சாதகமாகிவிட்டது. பொதுவாகவே, குள்ளநரி குணமுடைய வெள்ளையர்கள், இந்துக்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக எரியும் சாதி தீயில், எண்ணெய் விட்டு மேலும் மேலும், அதை காட்டு தீயாய் பரவச் செய்தனர். சரி, சுதந்திர பாரதமாவது சாதியில் இருந்து விடுப்பட்டதா? இல்லை! தீண்டாமை வேண்டுமானால் பெரிய அளவில் அழிந்துவிட்டது என்று கூறலாம் . ஆனால், சாதி வேறுபாடு என்ற நெருப்பு இன்னும் இந்துக்கள் மனதில் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.
பல சுயநல அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கையும், ஓட்டு வங்கியையும் பலப்படுத்த சாதி என்ற கேடுக்கேட்ட ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். பிரித்து ஆழ்வதில் ஆங்கிலேய பேய்களுக்கு, நம் ஆட்சியாளர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்ற பெயரிலே, பாரத மக்களிடம் இருந்து தேசபக்தியை ஒதுக்கிவிட்டனர். நம் மக்களிடம் உள்ள ஒரு பெரிய குறைபாடு என்னவேன்றால், "நாம் எதையும் சரியாக புரிந்து கொள்ளவும் மாட்டோம், தெரிந்து கொள்ளவும் மாட்டோம்." இதில் ஒரு பகுதி தான் சாதியும். இந்து தர்மத்தில் இல்லாத ஒரு விஷ்யத்தை, இந்து மதத்தின் பெயரில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உண்மையான தீட்டு இதுதான். சாதி ஏற்ற தாழ்வு தான் கொடுமை என்றால், இதைவிட ஒரு பெரிய கொடுமை ஒன்று அரங்கேறிவருகிறது.
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று முழங்கிய பாரதியார், இன்று பிராமண சாதி சங்கத்தின் மானசீக தலைவர்! சாதிக்கு அப்பார்பட்டு உழைத்த தேசத் தலைவர் காமராஜர், நாடார் சங்கத்தின் மானசீக தலைவர்! இவர்கள் மட்டுமல்ல, பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், தலைவர்களுக்கும் இன்று இதே நிலை தான். நான் முன்பு கூறியது போல, "நாம் எதையும் சரியாக புரிந்து கொள்ளவும் மாட்டோம், தெரிந்து கொள்ளவும் மாட்டோம்." என்ற குறைப்பாட்டின் வெளிப்பாடு தானே இதுபோன்ற செயல்பாடுகள்!
நன்றி "பாரத குரல்" சுஜி

No comments:

Post a Comment