அய்யாவின் சமாளிப்புத் திறமை
ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து கொடுக்க நினைத்து அழைத்தார். அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.
பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார். அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது. மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று. எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் ராய்க்குப் புரியாதே, என நினைத்தார். இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது மறந்துவிட்டது அய்யாவுக்கு.
அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார். ராய் அருகில் வந்தபோது, நாக்கில் கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார் அய்யா.
உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார். உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.
நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச் சமாளித்த அய்யாவின் திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.
@@@@@
நாகப்பட்டினம் விஜயராகலு வீட்டிற்கு அய்யா உணவு சாப்பிடச் சென்றார். 15 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. அய்யா 25 பேருடன் சென்றார். சென்றவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரி மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர். பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவந்த நிறத்தில் பெரிது பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்த அழகிரி கோபமுற்றார். சாப்பிட்ட கையை உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த அய்யா, அப்பா அழகிரி இதுவரை மல்லிகைப்பூ, இப்போது ரோசாப்பூ என்றதும் அனைவரும் சிரித்தனர். மேலும் அய்யா, அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும் தணியும் சினமும் போய்விடும் என்றாராம்.
@@@@@
(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)
(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)
No comments:
Post a Comment