Wednesday, 3 August 2011

வெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர்...........




நாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது -உடனடி கைமேல் பலன் கொடுப்பவர் நரசிம்மர். கர்ப்பவாசம் இல்லாமல் ஸ்தம்பத்தில் உக்ர ரூபமாய் அவதரித்த அவதாரம். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தன் பக்தன் வாக்கினைப் பரிபாலனம் செய்ய அண்டசரசரங்களிலும் ஊடுருவிக் கலந்தவன்.



ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
 பிரகலாதனின் அசஞ்சல பக்தியை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம்
அந்த நரசிம்மர் வெள்ளெருக்கில் அருளும் தலமாக தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டையில் - மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திகழ்கிறது.
வெள்ளெருக்கில் விநாயகர் தானே கேள்விப்பட்டிருகிறோம். விநாயகர் சதுர்த்தியின் போது வெள்ளெருக்கு மாலை அணிவிப்பது விஷேசமாயிற்றே.


சூரியனார் கோவிலிலும் வெள்ளெருக்கு தலவிருட்சமாயிற்றே.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆன்மீக தெருக்கூத்து நிகழ்ச்சிகள் பிரபலமாக நடைபெற்று வந்தன. அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின் போது பக்தபிரகலாதன் நாடகம் நடைபெறும்.


அந்தத் தெருகூத்து வம்சாவழியினர் ஒருவர் கனவில் நரசிம்மர் தோன்றி ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு இருக்கும் தன்னை எடுத்து பூஜைகள் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி அங்கு போய் பார்த்தபோது ஒரு பாம்பு புற்று இருக்கவே அதைத் தோண்டிப்பார்த்தபோது ஒரு பெரிய வெள்ளெருக்கு வேர் காணப்படவே அதில் நரசிம்ம உருவத்தைச் செதுக்கி வழிபட ஆரம்பித்தார்கள்.
பிறகு நரசிம்மர் வாக்குப்படி, அந்த வெள்ளெருக்கு மூர்த்தியை மூலவராகவும், உற்சவமூர்த்தியாக லட்சுமி நரசிமரையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் உற்சவம் நடத்தி , கோவிலையும் அழகுற நிர்வகித்து வருகிறார்கள்.
பக்தர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும் வரப்பிரசாதியகத் திகழ்கிறார் வெள்ளெருக்கு நரசிம்மர்.

பாவூர் பரந்தாமன் - பதினாறு கரங்களால் பரிவுடன் அருளும் நரசிம்மர்..























 

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பாவூர் சத்திரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்- சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூர் என்னுமிடத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கை உடனுறை ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் உள்ள நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் ஹிரண்ய கசிபுவை வதம் புரியும் கோலத்தில் தர்மம் காக்கும் தலைவனாகக் காட்சியளிக்கிறார். , 
பதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன. 


தல வரலாறு: நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் அவர் கூறினார். நால்வரும் பெருமாளைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். அந்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. 
இதையடுத்து பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்ஹார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். பிற்காலத்தில் பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர். 


குறிப்பிட்டுள்ளஇத்திருக்கோவிலின் அமைப்பு குடைவரைக் கோவில் அமைப்பில் இருப்பதால், இது பல்லவர்கள் காலத்திய கோவிலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் கோவிலின் கட்டிடக் கலை சோழர்கள் காலத்தை நினைவூட்டுகிறது.


இக்கலியுகத்தில் அர்ச்சாவதாரமாகக் கோவில் கொண்டிருக்கும் என்னை நீ அர்ச்சனை செய்து வழிபட்டால் உன் பாவங்கள் அனைத்தும் நீங்கும். மானிடனே, நீ இதைப் பயன்படுத்திக் கொள்' என்கிறார் மகாவிஷ்ணு.

இந்த ஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.
பொதுவாக ஆகம விதிகளின்படி திருக்குளமானது ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும். ஆனால் இங்குள்ள அமைப்பு வேறுவிதமானது. ஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த திருக்குளமாதலால், திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.

இந்தத் திருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.



சோழர்கள் காலத்தில் இவ்வூர் சத்தியரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பாகூர் என்றிருந்து, தற்போது பாவூர்என மருவி வழங்கி வருகிறது.

சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன்
 கி.பி.1101 முதல் 1124 வரை ஆட்சி செய்து வந்ததற்கு ஆதாரமாக ஒரு கல்வெட்டுச் செய்தியும் உண்டு. மேலும் அந்தக் காலத்தில் திருப்பணிகள் நடந்தமைக்கும் ஆதாரமான கல்வெட்டுகளும் உள்ளன. எனவே இதைக் கொண்டு கோவிலின் பழமைத் தன்மையை உணரலாம். தொல்லியல் துறையினரால் ஆதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 1310-ல் வேங்கடாசலபதி பெருமாள் "முனைகடி மோகர் விண்ணர்' என்று கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் பொருள் என்னவென்றால் போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர் என்பதாகும்.

பாண்டியர்கள் காலத்தில் தமிழகத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பினால் பல கோவில்கள் சிதிலமாக்கப்பட்டன. அப்போது சுந்தரபாண்டியன் என்ற மன்னன் வேங்கடாசலபதி திருவுருவத்தை பூமியில் புதைத்து வைத்ததாகவும், பின்னாளில் பூமியைத் தோண்டும்போது சிலை கிடைத்ததாகவும் ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் இத்திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் மாலை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும்சத்தம் கேட்குமாம். முதலில் பயந்து கொண்டிருந்த மக்கள், பின்னாளில் மாலை நேரப் பூஜையில் இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம் செய்து பானகம் நைவேத்யம் செய்யத் தொடங்கினர். அப்போது முதல் பெருமாள் சாந்த மூர்த்தியாகி பலருக்கும் பலவிதங்களில் அருள்பாலித்து வருகிறார்.

கடன் நீக்கும் பரிகாரம்: கடன்களிலிருந்து நிவாரணம் பெற, நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்து வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். நரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதிநாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும பால் அபிஷேகம் நடக்கிறது. இவரை சுவாதியன்று தரிசிப்பதால் தடைபட்ட திருமணம் விரைவில் நிறைவேறும். 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்திலுள்ள பாவூர்சத்திரம் சென்று, அங்கிருந்து சுரண்டை செல்லும் ரோட்டில் 5 கி.மீ., சென்றால் கீழப்பாவூரை அடையலாம். 
திறக்கும்நேரம்: காலை 7.30- 10.30மணி, மாலை5- இரவு7.30மணி
போன்: 94423 30643.


நரசிம்மப் பெருமாள் தன்னை நாடி வரும் அடியார்களுக்கு நாழிகைப் பொழுதில் நலம் செய்தருள்வார். பாவூர் சென்று பகவானின் அருளைப் பெறலாமே.


No comments:

Post a Comment