ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறீர்களா? நீங்கள் உங்களின் வாழ்க்கைப் போக்கினை தினமும் கூர்ந்து கவனித்து வருக! நிச்சயம் உங்களின் நியாயமான,நீண்டகால மற்றும் குறுகிய கால ஆசைகள்,லட்சியங்கள்,ஏக்கங்களை அது நிறைவேற்றும்.அப்படி நிறைவேறியிருந்தால்,அது பற்றிய விபரத்தை எமக்கு அனுப்பவும்.
அப்படி அனுப்பும்போது,எத்தனாம் தேதி ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்தீர்கள்? ஒரு நாளுக்கு எத்தனை முறை ஜபித்தீர்கள்? ஒரு வேளைக்கு எவ்வளவு நேரம் ஜபிக்க முடிந்தது? ஜபிக்க ஆரம்பித்த முதல் நாளில் என்ன மாதிரியான மனநிலை உண்டானது? ஒரு வாரத்தில்,இரு வாரத்தில்,ஒரு மாதத்தில்,இரு மாதத்தில்,மூன்று மாதத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களை கூர்ந்து கவனித்து,தயவு செய்து மின் அஞ்சலில் அனுப்பி வைக்கவும்.
அப்படி அனுப்பி வைக்கப்பட்டதில்,உங்களின் அனுமதி இருந்தால் மட்டுமே,உங்களுக்குக் கிடைத்த நன்மைகளை ஓம்சிவசிவஓம் வலைப்பூவிலும்,ஆன்மீகக்கடல் வலைப்பூவிலும் வெளியிடுவேன்.
நாளை 30.7.11 சனிக்கிழமை ஆடி அமாவாசை 31.7.11 ஞாயிறு வரையிலும் அமாவாசை இருக்கிறது.இன்று கூட ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கலாம்.
எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிப்பது? (மீண்டும் ஒரு நினைவூட்டல்) புதிய ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக
ஒரு மஞ்சள் துண்டு,வசதியிருந்தால் பட்டு மஞ்சள் துண்டு,மூன்று ருத்ராட்சங்கள்(காதி பவன்களில் கிடைக்கும்),அருகிலிருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரசாதமாகப் பெறப்பட்ட விபூதி,தனிமையான ஒரு இடம் அல்லது அறை,தினமும் ஒரு மணி நேரம்.
ஜபிப்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?
21 வயது நிரம்பிய எந்த மதத்தையும்,ஜாதியையும் சேர்ந்தவராக இருக்கலாம்.ஆண்,பெண்,திருநங்கை என்ற பேதமில்லை;யார் வேண்டுமானாலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம். அசைவம்,முட்டை சாப்பிடக்கூடாது.
ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை/ஜபிக்கப்போவதை பிரபலப்படுத்தக்கூடாது.
எப்படி ஜபிக்க வேண்டும்?
தினமும் ஏதாவது ஒரு மணி நேரம் ஒதுக்கி,அந்த நேரத்தில் செல்போனை பயன்படுத்தக்கூடாது;ஒலித் தொந்தரவு இராமல் பார்த்துக்கொள்ளவும்.நெற்றியில் விபூதி பூசிக்கொள்ளவும்.கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ளவும்.(பெண்கள் மாதஓய்வு நாட்களிலும் ருத்ராட்சம் கழற்றிட வேண்டிய அவசியம் இல்லை;உடலுறவு சமயத்திலும் ஆண்/பெண் எவரும் ருத்ராட்சம் கழற்றிட வேண்டிய அவசியம் இல்லை;சிவதீட்சை வாங்கியவர்களுக்குத்தான் ஏராளமாக கட்டுப்பாடுகள் உண்டு.)
மஞ்சள் நிற விரிப்பை விரித்து,அதில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பத்மாசனம் இட்டு அமரவும்.முடியாதவர்கள்/தெரியாதவர்கள் சாதாரணமாக உட்காரலாம்.உடலின் எந்த பாகமும் தரையில் படக்கூடாது.
மூன்று ருத்ராட்சங்களில் இரண்டை
உள்ளங்கையில் தலா ஒன்றாக வைத்து,உள்ளங்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளவும்.(ருத்ராட்சத்தில் ஐந்துமுகமே சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.அதுவே போதும்.வேறு முகங்கள் கிடைத்தாலும் ஓ.கே)
கண்களை மூடி,ஓம் (உங்கள் குல தெய்வம்) நமஹ என மனதுக்குள் ஜபிக்கவும்=ஒரு முறை மட்டும்.
ஓம் கணபதியே நமஹ என மனதுக்குள் ஜபிக்கவும்=ஒரு முறை மட்டும்
இந்த இடத்தில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நினைக்கவும்.எப்படியெனில்,என்ன நடக்க வேண்டுமோ,அதை மட்டும் வேண்டவும்.
உதாரணமாக எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்/எனது 3,00,000 கடன் விரைவில் தீர வேண்டும்/எனது கர்மவினைகள் விரைவில் கரைந்து,எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும்=இப்படி ஏதாவது ஒரு கோரிக்கையை மட்டும் நினைக்கவும்.
பிறகு ஓம்சிவசிவஓம் என திரும்பத் திரும்ப ஜபிக்கவும்.
தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகணங்க நாட்களில் வரும் கிரகண நேரங்களில் ஜபிக்க அளவற்ற புண்ணியமும்,ஆழ்ந்த மன நிம்மதியும் உருவாகும்.நமக்கு பொறாமை முதலான குணங்கள் இருந்தால் அது நம்மை விட்டு விலகிவிடும்.
வைஷ்ணவ சமயத்தைப் பின்பற்றுவோர்,ஓம்ஹரிஹரிஓம் என இதே போல ஜபிக்கலாம்.அப்போது,ருத்ராட்சம் தேவையில்லை;
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ,ஓராண்டு வரை தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர,நமது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும்.அதன்பிறகு,நமது எல்லா ஆசைகளும் நிறைவேறும்.நமது வாழ்க்கையில் இனி நடக்க இருப்பவை அனைத்தும் நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும்.
நமதுவீட்டில் ஒரு மந்திரத்தை வாய்விட்டு ஒரு முறை சொன்னால்,ஒரு முறை ஜபித்த பலன் கிடைக்கும்.மனதுக்குள்=உதடு அசையாமல் ஒரு முறை ஜபித்தால்,
வீட்டில் = 10 முறையும்
பழமையான(கருங்கல்லால் கட்டப்பட்ட சிவாலயத்திலும்/விஷ்ணு/அம்மன்/எந்தக் கோவிலாக இருந்தாலும்) ஆலயத்தில் = 1000 முறையும்
மலைமீதிருக்கும் கோவிலில் = 1 கோடி முறையும்
கடலோரக்கோவிலிலும்,கடலில் இடுப்பளவு தண்ணீரிலும்
= 2 கோடி முறையும்
ஜபித்த பலன்கள் நமக்குக் கிடைக்கும்.தரையில் நின்றோ,நடந்தவாறோ இந்த மந்திரத்தை ஜபித்தால்,ஜபித்த பலன் நமக்குக் கிடைக்காது.பூமிக்குப் போய்விடும்.
இதுவே,தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,பவுர்ணமி,அமாவாசை,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேற்கூறிய எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு பலன்கள் நமக்குக் கிடைக்கும்.இருந்த போதிலும்,நாம் ஜபிக்கும் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும்போது,நமது வாழ்க்கை சிந்தனை மாறிவிடும்.நாமே மாறிவிடுவோம்.
ஓம்சிவசிவஓம் ஜபிக்க குரு உபதேசம் தேவையில்லை;
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment