Tuesday, 26 July 2011

கோளறு திருப்பதிகம்


மறைக்காட்டுநாதர் கோவில், திருமறைக்காடு (வேதாரண்யம்)
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்
திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்
இறைவி பெயர்
வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்
பதிகம்
திருநாவுக்கரசர் – 5
திருஞானசம்பந்தர் – 4
சுந்தரர் – 1
எப்படிப் போவது
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் அகஸ்தியம்பள்ளி சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.
கோவில் விபரங்கள்: வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.
இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிப் பூஜித்த விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் பிரகாரத்தில் மேற்கு திசையில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.
தல புராண வரலாறு: ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.
ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி
1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன் 
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி 
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க 
எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும் 
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து 
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி 
திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து 
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர் 
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் 
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் 
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர் 
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல் 
கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக 
விடையேறு செல்வன் அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும் 
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த 
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் 
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன் 
பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் 
வருவகாலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு 
குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல் 
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி 
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து 
மறைஞான ஞானமுனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் 
அரசாள்வர் ஆணை நமதே. 
என்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை – “ஆதியில் பிரமனார் தாம்” என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.
“நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே”
இப்பாடலின் பொழிப்புரை : 
மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில் 
ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய எலி உண்ண வந்த போது 
அதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி 
விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் 
சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை 
எல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து 
குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார். 
வேதாரண்யம் கோவில் விளக்கழகு என்பது பழமொழி. வேதாரண்யம் பார்க்கப் போகும் நீங்கள் மாலை நேரத்தில் சென்று அந்த விளக்கழகையும் தரிசித்து இன்புறுங்கள்.

No comments:

Post a Comment